Home > சிறுகதை > சுவரொட்டி (சிறுகதை)

சுவரொட்டி (சிறுகதை)

        அப்துல்லா வறுமையில் வாடிய பிள்ளை, தந்தையை இழந்து, தாய் அப்பம் சுட்டு விற்பனை செய்பவள். அப்துல்லாவின் மாமன் ஊருக்கே பெயர் போன பணக்காரன். ஆனால் அப்துல்லாவிற்கு மாமாவிடம் இருந்து உதவி பெற பாக்கியம் இல்லை.
       “பக்கத்து வீட்டில் பசித்திருக்கும் போது, தான் மட்டும் புசிப்பவன் உண்மையான முஸ்லிம் அல்லன்” என அடிக்கடி இரவு காலத்தில் இலங்கை வானொலி முஸ்லிம் நிகழ்சி குரல் கொடுத்து உபதேசம் புரியும்.
    அந்த ஹதீஸைக் கேட்டு ரசிக்கும் மஹ்தூம் ஹாஜியாரின் இதயத்தை அது தொடவேயில்லை. கஷ்டப்பட்டு பணம் தேடி பணக்காரர்களாக வாழ்வோருக்கே ஏழைகள் படும் துயரம் விளங்கும்.  அடுப்பங்கரைகளில் பெண்கள் விடும் கண்ணீருக்கு பொருள் விளங்கும்.
    1971ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஏற்பட்ட ஜே.வி.பி.யின் கலவரத்தினால் தூரத்து முதலாளிமார் விட்டுச் சென்ற பொருட்களுக்கு குறுக்கு வழியில் உரிமையாளரானவர் மஹ்தூம் ஹாஜியார்.ஸக்காத் கொடுக்க போட்டி போடாவிட்டாலும் ஹஜ் செய்வதற்கு போட்டி போட்டு வெற்றி கண்டவர்.பணம் வரும் போது குணம் மாறும் என்பதை ஏழை உறவினர்களுக்கு எடுத்துக்காட்டிய பெருமை மஹ்தூம் ஹாஜியாரையே சாரும்.
      இளைஞன் அப்துல்லா ஏ.எல்.பரீட்சை எழுதிவிட்டு அரசியல் வாதிகளின் பின்னால் அலைந்து திரிந்து பாடம் படித்தவர். அரசியல் வாதிகளுக்காக கொடிகள் கட்டியும், சுவரொட்டிகள் ஒட்டியும், கோஷங்கள் எழுப்பி சுலோகங்களுடன் வாழ் நாட்களை வீண் நாட்களாக கடத்தியவர். அரசியல் வாதிகளுக்கு ஞாபகசக்தி குறைவு என்பதை உணர்ந்து இறைவன் அருளால் கல்வியே கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் ஆசிரியர் நியமனத்திற்கான போட்டிப் பரீட்சையை எழுதினார். அப்துல்லாவின் நண்பன் பீர் முஹம்மதுவும் எழுதினார். போட்டிப் பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற்ற அப்துல்லா அரசியல்வாதிகளின் உதவி இல்லாமலேயே ஆசிரிய நியமனம் பெற்றார்.
     அவரின் நண்பர் பீர் முஹம்மது பரீட்சையில் தவறிவிட்டார். அன்று முதல் நண்பர் பகைவராக மாறினார்.
          அப்துல்லா ஊர்ப் பாடசாலையில் நியமனம் 5ம் தரத்திற்கு பொறுப்பாசிரியராக இருந்தார். அதே வகுப்பில் மாமன் மஹ்தூம் ஹாஜியாரின் மகன் அமீன் முதல் மாணவனாக கல்வியில் சிறந்து விளங்கினான். மாமனுக்கு அப்துல்லா ஆசிரியர் மீது குடும்ப பாசம் இல்லாவிட்டாலும், அவர் மகன் அமீனுக்கு வகுப்பாசிரியர் மீது நல்ல மரியாதை இருந்தது. 
          உழைப்பதற்கு குறுக்கு வழி இக்காலத்தில் அரசியலைத் தவிர வேறு ஏதும் இல்லை, என்பதை உணர்ந்த மஹ்தூம் ஹாஜியார் அரசியலில் குதித்தார். தேர்தல் சுவரொட்டிகளை அவரின் கையாட்கள் ஊரில் ஒட்டினர்.
          அப்துல்லா ஆசிரியரின் வீட்டு முன் புறத்தில், பாழடைந்த வீட்டுச் சுவரில் ஒட்டப்பட்டிருந்த மஹ்தூம் ஹாஜியாரின் தேர்தல் சுவரொட்டிகளை கட்டாக்காலி ஆடுகள் கிழித்துச் சாப்பிட்டன .
        சுவரொட்டிகளை கிழித்தவர் அப்துல்லா ஆசிரியர் என ஒரு கதையை பரப்பிவிட்டார் அவரின் பகைவர் பீர் முஹம்மது. சொந்தக் குரோதங்களுக்கு பழி வாங்க ஏற்ற காலம் தேர்தல் காலம் என்பதை அறிந்திருந்தார். அரசியல்வாதி மஹ்தூம்  ஹாஜியார் சிந்திக்கவில்லை. எடுத்த எடுப்பிலேயே தம் கூலிப்படை காடையர்களை அப்துல்லா ஆசிரியருக்கு  எதிராகத் தூண்டிவிட்டார். அப்துல்லா ஆசிரியரின் வாழ்வு முடிந்து விட்டது.
        சில நாட்களின் பின் அவரின் மாணவன்  அமீன் 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் இலங்கையிலே ஆகக்கூடிய புள்ளிகள் 198ஐ பெற்று சாதனை படைத்து கல்விப் பகுதியினால் ஜப்பான் நாட்டுக்கு சுற்றுலாவை  மேற் கொள்ளும் பாக்கியம் பெற்றான்.
     ஆனால் நன்றி சொல்ல அந்த அப்துல்லா ஆசிரியரை அமீன் எங்கே தேடுவான்?

   

Categories: சிறுகதை
  1. No comments yet.
  1. No trackbacks yet.

Leave a comment