Home > News > ரமளான் மாதத்தில் பிறை பார்ப்பது அவசியமானதா?

ரமளான் மாதத்தில் பிறை பார்ப்பது அவசியமானதா?

சந்திர மாதத்தை முடிவு செய்ய பிறையைப் புறக்கண்ணால் பார்ப்பது அவசியம்-கட்டாயம் என்று சிலர் அடம் பிடித்து வருகின்றனர். எனவே பிறையைப் புறக்கண்ணால் பார்ப்பது ஷரீஅத்தில் (மார்க்க விதிமுறைகளில்) எந்த நிலையிலுள்ளது என்பதை ஆராயும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

மார்க்கத்தில் பர்ழ்-கட்டாயக் கடமை, சுன்னத் – நபி நடைமுறை என இரண்டு வகை இருக்கிறது. அல்குர்ஆனின் எண்ணற்ற வசனங்கள் இந்த இரண்டையும் வலியுறுத்துகின்றன. அடுத்து ஒரு கடமையை நிறைவேற்ற சில விதிகளை நிறைவேற்றியாக வேண்டும். உதாரணமாக கடமையான, சுன்னத்தான தொழுகைகைளை நிறைவேற்ற அங்க சுத்தி ஓளூ அவசியமாக இருக்கிறது. இன்ன தொழுகையை நிறைவேற்றுகிறேன் என்ற நிய்யத் – எண்ணம் அவசியமாக இருக்கிறது. மேலும் தொழுகையின் நிலை, ருகூஃ, சுஜுது, இருப்பு, அவை ஒவ்வொன்றிலும் ஓத வேண்டியவைகள் இவற்றை முறைப்படி நிறைவேற்றினால்தான் தொழுகை நிறைவேறும். இவை அனைத்தையும் தொழக் கூடிய ஒவ்வொரு ஆணும், பெண்ணும் நிறைவேற்றியே ஆக வேண்டும் ஒருவர் செய்தால் போதும்; அனைவருக்கும் அது போதுமானது என்ற நிலை இங்கு இல்லை.

இதுபோல் நோன்பை எடுத்துக் கொள்ளுங்கள். ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது கட்டாயக் கடமை. நோன்பு நோற்கும் ஆணோ, பெண்ணோ அதிகாலை பஜ்ரிலிருந்து சூரியன் மறைவு மஃரிபு வரை உண்ணாமல், பருகாமல், உடலுறவு கொள்ளாமல் இருப்பது கடமை. கடமையான நோன்பை நிறைவேற்றுகிறேன் என்ற நிய்யத் – எண்ணம் அவசியம். பாவமான – தீய பேச்சு, செயல்களிலிருந்து விடுபட்டு இருப்பது கொண்டே நோன்பு அங்கீகரிக்கப்படும். இல்லை என்றால் அது வெறும் பட்டினி கிடந்த நிலையையே பெற்றுத் தரும்.

இப்போது நமது ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டிய விசயம் ரமழான் பிறையைக் கண்ணால் பார்ப்பது, பர்ழ்-கட்டாயக் கடமையில் வருகிறதா? சுன்னத்-நபி நடைமுறையில் வருகிறதா? நோன்பின் ஷர்த்-விதிகளுக்குள் வருகிறதா? என்பதே! அப்படி ஆய்வு செய்யும்போது பிறையைப் புறக்கண்ணால் பார்ப்பது பர்ழாகவும் இல்லை; சுன்னத்தாகவும் இல்லை. நோன்பின் விதிகளிலும் இல்லை. பர்ழாக இருந்தால் அனைவரும் கண்டிப்பாகப் பார்த்தாக வேண்டும். சுன்னத்தாக இருந்தாலும் நபி வழியில் நன்மை தரும் செயலே! ஆனால் நபி(ஸல்) அவர்களின் மனைவிமார்கள் அனைவரும் பார்த்தாக ஆதாரமில்லை. இதிலிருந்து என்ன விளங்குகிறது? பிறையைப் புறக்கண்ணால் பார்ப்பது பர்ழும்-கடமையும் இல்லை; நோன்புக்கு உட்பட்ட ஷர்த்தும்-விதியும் இல்லை. பிறையைப் புறக்கண்ணால் பார்க்காமல் அதே சமயம் ரமழான் மாதம் ஆரம்பித்து விட்டது என்பதைத் திட்டமாக அறிந்த நிலையில் ஒரு முஸ்லிமான ஆணோ, பெண்ணோ நோன்பு நோற்று அதன் வரையறைகளைப் பேணி நடந்தால் நிச்சயமான அவர்கள் நோன்பின் முழுப் பலனையும் அடைய முடியும். பிறையைப் புறக்கண்ணால் பார்க்கவில்லை என்பதற்காக அவர்களுக்கு அளிக்கப்படும் நோன்பிற்கான நன்மையில் ஓர் அணுவளவும் குறைக்கப்படாது. 1400 ஆண்டுகளுக்கு முன்னர் பிறையைப் பார்த்தார்கள் என்றால், அன்று சந்திர மாதம் தொடங்குவதை அறிய கணினி கணக்கீடோ, வேறு வழிமுறை எதுவுமோ இல்லாத ஒரே காரணம்தான்.

ரமழான் ஆரம்பித்து விட்டால் நோன்பு நோற்பது கட்டாயக் கடமை(பர்ழ்), ஷவ்வால் முதல் நாளில் நோன்பு நோற்பது கண்டிப்பாகத் தடுக்கப்பட்டது(ஹராம்). பிறையைப் புறக்கண்ணால் பார்ப்பது பர்ழும் இல்லை; சுன்னத்தும் இல்லை. நோன்பிற்குறீய ஷர்த்தும் இல்லை. இந்த நிலையில் பிறையைப் புறக்கண்ணால் பார்ப்பதை ஷர்த்தாக்கி-விதியாக்கி பர்ழான நோன்பை விடச் செய்பவர்களும், ஹராமான நாளில் நோன்பு நோற்கச் செய்பவர்களும் இறைவனால் அவனது கலாமான அல்குர்ஆன் மூலம் நேரடியாக ஏவப்பட்டதை விடுவதும், விலக்கப்பட்டதை எடுத்து நடப்பதும் முகல்லிது மவ்லவிகளின் வாடிக்கை; மார்க்கமில்லாததை மார்க்கமாக்குவதிலும் பிடிவாதமாக இருப்பார்கள்.

உதாரணமாக பாங்கு ஒலிபெருக்கியில் சொல்லப்பட்டாலும் உயரமான இடத்தில் நின்றுதான் சொல்ல வேண்டும், இடையில் வலது பக்கமும், இடது பக்கமும் திரும்ப வேண்டும் ஜும்ஆ உரை நிகழ்தும் போது கையில் ஒரு தடியையோ, வாளையோ பிடித்திருக்க வேண்டும்; எதிரே உள்ள மக்களுக்கு ஜும்ஆ உரை விளங்காவிட்டாலும் அரபு மொழியில் தான் உரை நிகழ்த்த வேண்டும்; அதே போல் திருமண உரை அங்கு வந்திருக்கும் முஸ்லிம் மற்றும் மாற்று மத, நாத்திக மக்களுக்கு விளங்காவிட்டாலும் அந்த உரையை ஒரு வெற்றுச் சடங்காக அரபியில் தான் செய்ய வேண்டும் என்பதெல்லாம் முகல்லிது மவ்லவிகளின் பிடிவாதம். “தாடியை விடுவது எனது எஜமானனின் கட்டளை” என்ற நபி(ஸல்) அவர்களின் அறிவுறுத்தலுக்கு மாறாக தாடியை சிறைப்பது முகல்லிது மவ்லவிகளிடம் குற்றமில்லை. ஆனால் தொழுகையில் ஏவப்படாத தொப்பி போடுவது கட்டாயக் கடமை – பர்ழ் என வலியுறுத்துவார்கள்.

ஆனால் சில மவ்லவிகளுக்கு நேர்ந்தது என்ன? கரையேறி வந்த நாற்றக்குட்டையில் மீண்டும் போய் விழுகிறார்களே? குர்ஆன், ஹதீஸ் என தம்பட்டம் அடிக்கும் இவர்கள், முகல்லிது மவ்லவிகளைப் போல் சொந்த சுய விளக்கம் எதுவும் கொடுக்காமல், நேரடியாகச் சொல்லும் அதாவது பிறையைப் புறக்கண்ணால் பார்த்தே மாதத்தைத் தீர்மானிக்க வேண்டும் என்று சொல்லும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் அல்ல; இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸையாவது இந்த மவ்லவிகளால் காட்ட முடியுமா?

அல்குர்ஆன் அல்ஹஜ் 22:27-ல் தூர நாடுகளிலிருந்து மெலிந்த ஒட்டகங்களில் ஹஜ்ஜுக்கு வருவார்கள் என்று நேரடியாகச் சொல்லப்பட்டிருந்தும், இன்று தூர நாடுகளிலிருந்து ஒட்டகம் அல்லாத ஆகாய விமானம் போன்ற நவீன வாகனங்களில் போவது குர்ஆனின் கட்டளைக்கு விரோதமானது அல்ல; ஹஜ் கடமையில் ஓர் அணுவளவும் குறைவு ஏற்படாது என்பது போல், பிறையைப் புறக்கண்ணால் பார்த்து மாதத்தை தீர்மானிக்க வேண்டும் என்று ஹதீஸில் நேரடியாகச் சொல்லப்பட்டிருந்தாலும் (அப்படியொரு பலவீனமான ஹதீஸும் இல்லை என்பது தனி விசயம்) இன்றைய நவீன கணினி கணக்கீட்டை ஏற்று மாதம் பிறப்பதை கண்ணால் பார்ப்பதைவிட மிகத் துள்ளியமாக அறிந்து அதன்படி நடப்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதே என்ற நிலை தெளிவாக இருக்கும் போது, புறக்கண்ணால் பிறையைப் பார்க்க வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்கள்.

இஸ்லாத்தின் குறிக்கோள் சமுதாய ஒற்றுமையே!

சர்வ வல்லமை மிக்க அல்லாஹ் அல்குர்ஆனில் இரண்டு இடங்களில் இந்த சமுதாயத்தை உம்மத்தன் வாஹிதா – ஒரே சமுதாயம் என்று குறிப்பிட்டுக் கூறுகிறான். (21:92,93, 23:52,53) பிளவுக்கும் பிரிவுக்கும் இடமே கொடுக்கக் கூடாது என பல இடங்களில் வலியுறுத்துகின்றான். அல்லாஹ்வின் எச்சரிக்கை பற்றி நபி(ஸல்) அவர்கள் மிகக் கவனமாக இருந்தார்கள். தமது உம்மத்தில் நயவஞ்சகர்களாக இருந்து கொண்டு குறைஷ் காபிர்களுடன் போய்ச் சேர்ந்து சிலைகளை வணங்கி இணை வைத்தவர்களையும் முஷ்ரிக், காபிர்களுடன் போய்ச் சேர்ந்து சிலைகளை வணங்கி இணைவைத்தவர்களையும் முஷ்ரிக், காபிர் என ஃபத்வா கொடுத்து தமது உம்மத்திலிருந்து வெளியாக்கவில்லை; அல்லது அவர்களிலிருந்து வேறுபடுத்திக் காட்ட ‘முஸ்லிம்’ அல்லாத பிரிதொரு பெயரைத் தேர்ந்தெடுக்கவில்லை. அவர்கள் பற்றிய தீர்ப்பை அல்லாஹ்விடம் விட்டு விட்டார்கள்.

ஒவ்வொரு கட்டத்திலும் முஸ்லிம் உம்மத்தின் ஒன்றுபட்ட நிலையைப் பேணி பாதுகாத்தார்கள். பிறை விஷயத்திலும் அதே பேணுதலைத்தான் கடைபிடித்தார்கள். அன்று , இன்றிருப்பது போல் தகவல் தொடர்போ, விரைந்து செல்லும் வாகனங்களோ, விஞ்ஞான தொழில் நுட்பங்களோ இல்லாத ஒரு கால கட்டம். அன்று ஓர் ஊரில் இடம்பெறும் சம்பவம், சுமார் 25 கி.மீ. தூரத்திலுள்ள பிரிதொரு ஊருக்கே உடனடியாக தெரிய முடியாத கால கட்டம். அன்று ஒரு ஊரில் பிறை பார்த்து நோன்பு வைப்பதோ, பெருநாள் கொண்டாடுவதோ பக்கத்து ஊருக்குத் தெரியாத கால கட்டம். எனவே ஊர்களுக்கு மத்தியில் பிறை விஷயத்தில் சச்சரவு வர வாய்ப்பே இருந்ததில்லை.

ஆனால் அன்று, ஒரே ஊருக்குள் பிறை விஷயத்தில் சச்சரவு வர வாய்ப்பு இருந்தது. ஒரே ஊரில் ஒன்றாம் பிறையா, இரண்டாம் பிறையா என்ற சச்சரவும், மாதம் 29 -ல் முடிகிறதா, 30 -ல் முடிகிறதா என்ற சச்சரவும் வர வாய்ப்புகள் இருந்தன.

ஒரே ஊருக்குள்ளேயே ஏற்படும் இப்படிப்பட்ட சச்சரவுகளைத் தீர்த்து சமூக ஒற்றுமையை கட்டிக் காக்கும் அவசியத்தில் நபி(ஸல்) அவர்கள் சில உபதேசங்களைச் செய்தார்கள்.

“மேக மூட்டமாக இருந்தால் மாதத்தை 30 ஆக நிறைவு செய்யுங்கள்” என்ற போதனையும், நபித் தோழர்கள் ஒன்றாம் பிறை இரண்டாம் பிறை என்று சச்சரவிட்டுக் கொண்டதில், இப்னு அப்பாஸ்(ரழி) என்றைய தினம் நீங்கள் பிறையைப் பார்த்தீர்களோ அன்றைய தினத்தின் பிறை என்று ஒன்றாம் பிறை என்றோ, இரண்டாம் பிறை என்றோ குறிப்பிட்டுக் கூறாமல் முற்றுப்புள்ளி வைத்தது, சிரியாவிலிருந்து வந்து குரைப் கூறிய தகவலை ஏற்காமல், நபி(ஸல்) அவர்கள் ரமழான் பிறையைப் பார்த்து நோன்பை ஆரம்பிக்கவும், ஷவ்வால் பிறையைப் பார்த்து நோன்பை முடித்து பெருநாள் கொண்டாடவும் கட்டளையிடவில்லை என்ற கருத்தில் கூறி சச்சரவுக்கு முற்றுப் புள்ளி வைத்ததும், அன்றிருந்த சச்சரவுகளைத் தீர்க்கும் நோக்கத்திலேயாகும். காலம் கடந்த அந்த சிரியா தகவலை ஏற்பதாக இருந்தால் மதீனாவாசிகள் முதலில் விட்ட ஒரு நோன்பை களா செய்ய வேண்டும். இது மதீனாவாசிகளிடையே பெரும் சச்சரவை தோற்றுவிக்கும் என்ற காரணத்தாலேயே இப்னு அப்பாஸ்(ரழி) அதை நிராகரித்தார்கள். அன்று ஏற்பட்ட இப்படிப்பட்ட சச்சரவுகளைத் தீர்த்து சமூக ஒற்றுமையைப் பேண வேறு மாற்று வழி இருக்கவில்லை. எனவே அந்த ஒரே வழியைப் பயன்படுத்தினார்கள்.

ஆனால் இன்று நிலமை அப்படி இல்லை; உலகில் எங்கு பிறை பார்த்தாலும் அடுத்த வினாடியே உலகமெங்கும் அந்த தகவல் கிடைத்து விடும் நவீன வதிகள் நிறைந்த உலகம். அதற்கு மேலும் சந்திரன் என்று எந்த நேரத்தில் தனது முதல்மாத சுற்றை முடித்துக் கொண்டு அடுத்த மாத சுற்றை ஆரம்பிக்கிறது என்று நாள், மணி, நிமிடம், வினாடி முதல் துள்ளியமாக பல மாதங்கள் என்ன? பல வருடங்களுக்கு முன்னரே கணக்கிட்டுக் கூறும் கணினி யுகத்தில் இருக்கிறோம்.

எனவே இன்று முஸ்லிம் சமுதாயத்தில் ஏற்படும் ஒரே சச்சரவு ஒரே ஊருக்கள் மட்டும் அல்ல உலகளாவிய அளவில் ஏற்படும் சச்சரவு. அங்கு பிறை பார்த்து பெருநாள் இல்லை? என்ற சச்சரவு ஏற்படும். அன்று மற்ற ஊர்களின் நிலவரங்கள் தெரியாது இருந்தது போலவா இன்று நாம் இருக்கிறோம். மக்காவில் பெருநாள் தொழுகை நடப்பதை உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் இன்று நாம் பார்க்க முடிகிறது. இந்த நிலையில் தத்தம் பகுதி பிறை என பத்தாம்பசலி கருத்தைச் சொல்வது சரியா? என ஒருசாரார்.

நபி(ஸல்) அவர்களது காலத்தில் பிறை கண்ணால் தான் பார்க்கப்பட்டிருக்கிறது. எனவே இன்றும் நாம் கண்ணால் பார்த்தே முடிவு செய்ய வேண்டும் என அடுத்த சாரார். கணினி கணக்கீட்டை ஏற்காவிட்டாலும் உலகின் எப்பகுதியில் பிறை தெரிந்தாலும் எதை ஏற்றுச் செயல்படலாம் என பிரிதொரு சாரார். அன்று வெவ்வேறு ஊர்களில் மாறுபட்டும் ஒரே ஊரில் ஒன்றுபட்டும் இருந்த நிலைக்கு மாறாக இன்று ஒரே ஊரிலேயே ஒன்றுபட்டிருக்க வேண்டிய முஸ்லிம் சமுதாயம் மூன்றாகப் பிரிந்து பெருநாள் கொண்டாடுகிறது. ஒரே குடும்பத்தில் கணவன் ஒரு கட்சி, மனைவி ஒரு கட்சி, மகன் ஒரு கட்சி என்று மூன்றாகப் பிரிந்து பெருநாள் கொண்டாடும் பரிதாப நிலை! தொழக் கூடாத மாதவிடாய் பெண்களும் தொழுகைத் திடலுக்கு வந்து ஒற்றுமை காக்க வேண்டும், ஒன்றுபட்டுக் கொண்டாட வேண்டும் என்று கட்டளையிட்ட நபி(ஸல்) அவர்கள் இப்படி மூன்றாகப் பிரிந்து நிற்பதை சரி காண்பார்களா? இதுவா நபியின் போதனை?

முஸ்லிம்கள் சிந்திக்க கடமைப்பட்டிருக்கிறார்கள். இன்றுள்ள சூழ்நிலையில் மிகத் துல்லியமாக கணக்கிட்டு முன் கூட்டியே சொல்லும் நூற்றுக்கு நூறு சரியான உறுதியான கணக்கீட்டின் அடிப்படையில் மாதம் பிறந்ததை அறிந்துள்ள அனைவரும் ஒன்றுபட்டு ஒரே நாளில் நோன்பு நோற்று, ஓரே நாளில் பெருநாள் கொண்டாட முன் வந்தால் மட்டுமே, பெருநாளை எதிர்பார்த்து காத்திருந்து அல்லல்படும் சிரமம் தீர வழி பிறக்கும்.

இதோ நபி(ஸல்) வழிகாட்டுகிறார்கள். நீங்கள் நோன்பு என முடிவு செய்யும் நாளில் தான் நோன்பு. நோன்புப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாளில் தான் நோன்புப் பெருநாள். ஹஜ்ஜுப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாளில் தான் ஹஜ்ஜுப் பெருநாள், என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூஹுரைரா (ரழி) திர்மிதீ ஆயிஷா(ரழி) பைஹகீ

அன்று நபி(ஸல்) அவர்கள் எந்தப் பகுதியில் இருந்து கொண்டு சொன்னார்களோ அந்த ஊர் மக்களின் ஒற்றுமையை நோக்கமாகக் கொண்டு சொல்லப்பட்டது. அன்றைய கால கட்டத்தில் தத்தம் பகுதிக்கு – அதாவது ஒவ்வொரு ஊருக்கும் இது பொருந்தும். காரணம் அன்று பக்கத்து ஊரில் என்ன நடக்கிறது என்பது அடுத்த ஊருக்குத் தெரிய முடியாத காலகட்டம்.

இன்றைய கால கட்டத்தில் நாம் அப்படியா இருக்கிறோம்? முழு உலகமும் ஒரு சிற்றூர் போல் சுருங்கி விட்டது. தகவல்கள் உலகின் எந்த மூலையிலிருந்தும் அடுத்த வினாடியே கிடைக்கிறது. பல நாட்கள், பல மாதங்கள் தொலைதூர பிரயாணம் இன்று சில மணி நேரத்தில் முடிகிறது. சவுதியில் பிறையைத் தனது கண்ணாலேயே பார்த்து விட்டு அடுத்த நான்குமணி நேரத்தில் ஒருவர் இலங்கை – தாயகம் வந்து விட முடியும். அன்று இது சாத்தியமா? இல்லை! மக்காவுக்குப் பக்கத்திலுள்ள தாயிஃபுக்கு போகவாவது அன்று முடியுமா?

தலைப்பிறையை தனது கண்ணாலேயே பார்த்து விட்டுத் தாயகம் வந்த அவர் என்ன செய்ய வேண்டும்? இலங்கையில் – தாயகத்தில் மற்றவர்கள் நோன்பு பிடிப்பது போல் நோன்பு பிடிக்க வேண்டுமா? அல்லது அவர் சவுதியில் தனது கண்ணாலேயே பிறை பார்த்ததை வைத்து பெருநாள் கொண்டாட வேண்டுமா? இந்த மவ்லவிகளிடம் இதுபற்றி கேள்வி கேட்டு பல வருடங்கள் ஆகிவிட்டன. இன்று வரை பதில் அளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருப்பவர்கள், கீரல் விழுந்த இசைத் தட்டு போல் சொன்னதையே மீண்டும் மீண்டும் தத்தம் பகுதி பிறை என அவர்களே செயல்படுத்த முடியாததை உளறிக் கொண்டிருந்தால் அதன் பொருள் என்ன?

மேலே கண்ட ஹதீஸின் படி அன்று ஊர்களுக்குள் சமுதாய ஒற்றுமை நிலை நாட்டப்பட்டது. உலகமே ஒரே ஊர்போல் சுருங்கிவிட்ட இந்த கால கட்டத்தில் இந்த ஹதீஸை அமுல்படுத்தும் முறை என்ன என்று சிந்தித்தால், இன்று “நீங்கள்” என்று அன்று நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டது ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தையே குறிக்கும். அந்த அடிப்படையில் உலக முஸ்லிம்கள் அனைவரும் ஒரே நாளில் – ஒரே பிறையில் – ஒரே கிழமையில் நோன்பை ஆரம்பித்து, ஒரு நாளில் நோன்பை முடித்து, ஒரே நாளில் நோன்புப் பெருநாள் கொண்டாடுவதும், ஒரு நாளில் ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடுவதும் தான் நபி நடைமுறையை ஏற்று ஒற்றுமையாகச் செயல்படுவதாக இருக்கும்.

இதற்கு தத்தம் பகுதி பிறை என்பதும் சாத்தியமில்லை; எங்கிருந்தாவது பிறைத் தகவல் வருகிறதா? நாளை பெருநாளா? இல்லையா? பெருநாள் கொண்டாட உணவு வகைகளை ஏற்பாடு செய்வதா இல்லையா? இறைச்சிக்கு ஆடுகளை அறுப்பதா? இல்லையா? என இரவு முழுவதும் விழித்திருந்து எதிர்பார்த்துக் கொண்டிருப்பதும் அவசியமே இல்லை.

இறைவனது ஃபிஅலான -செயலான விஞ்ஞான உண்மையை ஏற்று, ரமழான் முடிந்து ஷவ்வால் மாதம் ஆரம்பித்து விட்டது என்பதைத் துல்லியமாக, திட்டமாக எவ்வித சந்தேகத்திற்கும் இடமில்லாமல் முன் கூட்டியே அறிவித்து, அதனை செயல் படுத்துவதே, சமுதாய ஒற்றுமையைப் பேணிக் காக்கும் ஒரே வழியாக இருக்கும். முஸ்லிம்களே சுயமாகச் சிந்தித்துச் செயல்படுங்கள். அல்லாஹ் ஒரே சமுதாயம் என்று கூறுவதற்கு முரணாக மூன்றாகப் பிளவுபடுத்தாதீர்கள்.  அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகாதீர்கள். அல்லாஹ்வை முறையாக அஞ்சுங்கள்.
நன்றி -‍ அந்நஜாத்
Categories: News
  1. No comments yet.
  1. No trackbacks yet.

Leave a comment